Saturday 13 September 2014


கனவு வெளியில்......

ஏகாந்த மோனத்தில்
திரள் கனவு
விந்தைகளை எண்ணி
விரைகின்றேன் வீடுதேடி
என்காலில் இடர்ப்பட்டது
ஒரு கருங்கோளம்
நல்ல வேளை காயம்படவில்லை
தெருக் கல் தானே என்று
திரும்பவுமில்லை
காத தூரம் கடந்திருப்பேன்...
பேரொளி
பெருஞ்சத்தம்
பெரும்புயல்
பெருவெள்ளம்
சிந்தைக்கெட்டுவதற்குள் சிதைத்த
பெருவெடிப்பு
ஒரு பிரளயம் உருவாகிறது
ஒரு பிரபஞ்சம் உருவாகிறது.
ஆம் தடுக்கியது வெறும்
தெருக் கல் அல்ல
ஒரு பிரபஞ்சம்
ஒளிந்திருந்த
பூரணப் பொருண்மை
பரிபூரணப் பொருண்மை
இனம்புரியா இன்பம்
பிரளயத்தைக் கண்ட
முதல் மனிதன்
பெரு வெடிப்பைக் கண்ட
முதல் மனிதன்
பரிபூரணத்தைக் கண்ட
முதல் மனிதன்
பிரமிப்பில் பேதலித்து
விரைகின்றேன் வீடுதேடி
வழியெங்கும் வண்ணமிலா
கருங்கோளம்
எது கல்
எது கருந்துளை
எது பரிபூரணப்பொருண்மை
என்ற புரிதல் இல்லை
அடிமேல் அடிவைத்து
நடக்கின்றேன்
சிற்சில பிரளயங்கள்
பற்பல பிரபஞ்சங்கள்
உருவாகிக் கொண்டேயிருந்தன
எண்ணிலா பூரணங்கள்
வெடித்துவிடக் காத்திருக்கின்ற
எண்ணிலா பிரளயங்கள்
பெயர்த்தெறிய காத்திருக்கின்ற
எண்ணிலா பிரபஞ்சங்கள்
பிறக்க காத்திருக்கின்ற
எது காயத்திற்கான காத்திருப்பு
எது காலத்திற்கான காத்திருப்பு

எவை கல்லடிபடா காயங்கள்
கனவு வெளியில்....... 

ஒரு உன்னதமானவனின் தலைக்கனம்
..............................................
சிந்திக்க தெரிந்த அனைத்தும்
தேடும் விடையில்லா வினா
'நான் யார் ?'
ஏன் சிந்தையற்றவைக் கூட
தேடியிருக்கலாம்
நான் யார்
நானும்தான் கேட்டேன்
'நான் யார் !'
ஒரு தமிழன்?
இல்லை. 
மொழியற்றவனின் உடல்மொழிதலையும் உணர்ந்துப் பார்த்தவன்.
ஒரு இந்தியன்?
இல்லவே இல்லை. 
பாகிஸ்தானியின் கண்ணீரிலும் 
கரைந்துப் போனவன்.
ஒரு மனிதன்? 
வாய்ப்பே இல்லை
சின்னஞ்சிறு நாயின் குழைவிலும்
சிலிர்த்துப் போனவன்.
அப்படியானால் 
நான் யார்? 
என்னை உருவாக்கியவை 
எவை எவை
தேடினேன்!
தாயின் சத்து
தந்தையின் வித்து
வெயிலோனின் வர்ணங்கள்
மழலையின் மழலை
பச்சிளங்கன்றின் ஸ்பரிசம்
முன்பின் தெரியாதவனின்
புன்சிரிப்பு
நெடுநாள் அறிந்தவனின்
பெருங்கோபம்
வழிப்போக்கனின் அசட்டை
இளங்கன்னியின் கடைக்கண் பார்வை
கண்ணீரைப் பார்த்துக் 
கலங்கியவனின் கண்ணீர்
உவகையைப் பார்த்துப்
பூரித்தவனின் புன்னகை
சிறுமையைக் கண்டு
சினந்தவனின் சீற்றம்
ஏழ்மையைக் கண்டு 
இரங்கியவனின் இரக்கம்
பலநாள் பசித்தவன்முன்
நான் கொண்ட
பெரும் போஜனம்
என்நினைவுடன் மரித்துப்போனவர்களுடன்
மரித்துப்போன எந்தன் நினைவுகள்
இவை மட்டுமா என்னை உருவாக்கியவை!
இன்னும் தேடினேன் 
நான் யார்! 
உன்னதமான சகோதரிகள்
படைத்த சகோதரனா
உன்னதமான தாய்கள்
படைத்த மகனா
உன்னதமான தோழர்கள்
படைத்த தோழனா
உன்னதமான பொருட்கள்
படைத்த ஜடப்பொருளா
உன்னதமான உயிர்கள்
உருவாக்கிய உணர்வா
எந்த வரையரைக்குள்ளும்
சிக்காத
நான் யார்!
நான் யார்?

பிரபஞ்சத்தின் அனைத்து
உன்னதங்களும்
உண்டாக்கிய
மகோன்னதன்.
அன்புமய வெளியில்
எண்ணிலா மகோன்னதர்களின்
வரிசையில் நானும் ஒரு மகோன்னதன்.
இன்னும் உன்னதங்களைத் தேடும் மகோன்னதன்.
மகோன்னதர்களை படைக்கும்
மகோன்னதமானவன் .
இத்தனைத் தெரிந்தும்
இன்னும் தேடுகிறேன்
'நான் யார் !?'
இனியும் தேடுவேன் ........