Monday 26 January 2015

நடந்தது என்ன ?
-------------------
கதிரவன் மீது வந்த புகாரைப் பாருங்கள்.

இரவு  தன்னை
கடத்தியதாய் இட்டுகட்டியது.
கடல்  தன்னில்
முழுகி எழுவதாய் கதை சொன்னது.
வானம் நீலம் மஞ்சள் சிவப்பு என சாயமூற்றி
ஹோலி கொண்டாடி
வஞ்சித்தான் என வெடித்தது.
மலர் தன்னைப்
பார்வையால் கொல்(ள்)வதாய்
மருகி நின்றது.
பனித்துளி தன்னை
களவாடியதெப்படி என்ற
காரணம் சொன்னது...

நடந்தது என்ன ?

கதிரவன்
பேரன்புடன்
கோடி கரங்களை விரித்தபடி
கோடி ஆண்டுகளாய் இப்பிரபஞ்சத்தில்
சுற்றுலா போகிறான் குடும்பத்துடன்.

அவன்
இறப்பை நோக்கியோ
இலக்கை நோக்கியோ
பயணிப்பதில்லை.
கோடி கரங்கள் விரித்தபடி
குடும்ப பயணம் மட்டும் தான்.
அது திசையில்லா பயணம்
திக்கு திசையில்லா பிரபஞ்ச
வெளியில்
புரியாத பயணம்
புதிரான பயணம்
அந்தப் பயணத்தில்
கொள்கை இல்லை
குறிக்கோள் இல்லை
குறுக்கீடு இல்லை....

அந்த கரங்கள் யாரையும்
அணைப்பது கூட இல்லை. .
அவன் கரங்கள் நீண்டிருக்கின்றன அவ்வளவே.

இருள் அவன் கரங்கள் இடையே
ஒளிந்து கொள்கிறது.
இருள்
ஒளிந்து கொண்ட கடத்தல்
நாடகம் இது.

கடல் அந்த கரங்களை
ஆரத் தழுவிக் கொள்கிறது.
கடல்
தழுவிக் கொண்ட
தாப நடனமிது.

வானம் அந்த கரங்களை முறுக்கி
சித்ரவதை செய்து
வண்ணங்களை பிழிகிறது.
வண்ணம் பிழியும்
வானத்தின்  நிஜ
ஹோலி இது.

மலரின் புகார் தான்
புழுகின் உச்சம்
அண்டப் புழுகு ஆகாசப் புழுகில்லை
அது
பிரபஞ்ச புழுகு.
கரங்களில் ஏது பார்வை !
இல்லாத  பார்வையால் கொல்ல எப்படி முடியும்.
கதிரவன் கரங்கள் மலரினும்
மெல்லியதாயிற்றே
அதனால் மலர்களைக் கொள்ளவும் முடியாதே.

மலரின் இதழ்கள் கதிரவனின்
கரங்களை முத்தமிடுவதை
நீங்களே பாருங்கள்.
இதழ் முத்தத்தால் கரங்களை
மயக்கிவிட்டு
பார்வையால் கொல்(ள்)வதாய்
பசப்புகிறாள்.
மயங்கிய கரங்களின்
முத்தக் களிப்பு அது
மீளாத களைப்பு அது.

பனித்துளி கதிரவன்  கரங்களைக்
களவாடி இறக்கை செய்து
பறந்து போகிறது.
காற்று வெளியில் காதல்
கொண்டு
ஓடிப்போன பனித்துளி இது.
இது ஒரு களவாணியின் காதல்.



நான் மிகப் பெரியவன்
எல்லாப் புகழும் எனக்கே
நான் இன்றி ஒரு அணுவும்
அசையாது
என்று
பீற்றித் திரிந்த
வக்ரம் பிடித்த
மனநிலை பாதிக்கப்பட்ட
இறைவன் என்ற பெயரில்
உலாவி வந்த
சிலர்
இன்று தான்
உண்மையாக
தூண்களிலும் துரும்புகளிலும்
ஒளிந்திருக்கிறார்கள்......
துப்பாக்கிக் குண்டுக்கு பயந்து

தீண்டாமையை மறுத்த
ஜாதியும்
தீவிரவாதத்தை மறுத்த
மதமும்.....

"எனக்கு ஜாதியில் நம்பிக்கை
உண்டு
ஆனால் அனைத்து ஜாதிகளும்
சமம் என்பேன்"
என்பவன் எப்படி கடைந்தெடுத்த
ஜாதி வெறியனோ !
அப்படித்தான் இந்த மதவெறியர்களின் சகோதரத்துவமும்
"கடவுள் நம்பிக்கை உண்டு
ஆனால் தீவிரவாதியில்லை"
பச்சையான அபத்தம்.
" Boko haram" "Taliban"
மறுமையில் சுகம் தேடும்
மார்க்க வெறியர்களே நீங்கள்
வாழவே தகுதியற்ற ஜென்மங்கள். உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை
இருந்தால்உடனேசெத்து
எல்லாம் வல்ல அந்த அவனிடம்
போய்ச் சேர்ந்து தொலையுங்கள்
எல்லாப் புகழையும் அங்கேயே
பரப்புங்கள்...
இங்கே நரகத்தில்
இருந்து எங்களை மீட்கும்
மீட்பர் பணிக்கும்
 வாழ பழக்கவும்
தீமையை ஒழிக்கவும்
அன்பை பழக்கவும்
யாரும் வேண்டாம்....
உங்கள் ஆன்மிக வெங்காயமும்
வேண்டாம்
ஐந்து வேளைத் தொழுகை
வேண்டாம்
பத்து கட்டளைகள் வேண்டாம்
தம்மங்கள் வேண்டாம்
போதனையும் வேண்டாம்
புண்ணாக்கும் வேண்டாம்
கருணை வேண்டாம்
காருண்யம் வேண்டாம்
நாங்கள் துன்பத்திலே
சாகிறோம்
எங்களை விட்டுவிடுங்கள்
தினம் தினம் கொல்லாதீர்கள்.
லீனா மணிமேகலை எழுதிய
இரண்டு கவிதைகள் நினைவில்
குத்துகிறது..
பட்டப் பகலில்
நட்ட நடு வீதியில்
நிர்வாணப்படுத்தி
சவுக்கால் அடித்தது போன்ற
வலி கொடுத்த அந்த எழுத்துகள்
இவ்வுலகில் ஆண்கள்
எல்லோரும் எப்படி
ஓரே மாதிரியாய் இருக்கிறார்கள்
என்ற கேள்வியில் ஆண்களின்
தோல்
நிர்வாணத்தைத் தாண்டியும்
உரிக்கப்படுகிறது.
அதே போல
கடவுள் மீது நம்பிக்கை
உள்ளது
ஆனால் நான் தீவிரவாதியில்லை
என்று எவன் சொன்னாலும்
இனி சர்வ ஜாக்ரதையாய்
இருக்க வேண்டும்.....
இனி எவனாவது
நான் கடவுள் நம்பிக்கை
உள்ளவன் என்றால்
அவனை கொன்றுவிட மனம்
துடிக்கிறது
லால் கிருஷ்ணனும்
இலங்கை புத்தனும்
குஜராத் காவிகளும்
உலகெங்கும் இஸ்லாமியன்களும்
உலகெங்கும் கிறித்தவன்களும்
பாலஸ்தீனத்தில் யூதன்களும்
உலகெங்கும் கம்யூனிஸ்டுகளும்
கொலை மீது
அளவு கடந்த அன்பு கொண்டு
நடத்தும் 
அட்டூழியங்களைக் கேட்டாலே
கொலை வெறி வருகிறது......
நம்பிக்கை என்ற 
வார்த்தையைக் கேட்டாலே
வயிறு எரிகிறது. ..
உங்கள் கோட்பாடுகளையும்
கொள்கைகளையும்
குருட்டுத்தனங்களையும்
கோமாளித்தனங்களையும்
எல்லாவல்ல
எல்லையில்லாத
உருவமில்லாத
உங்களைக் காத்தருளும்
சொர்க்கம் தரும்
சுகம் தரும்
அந்த பெரிய கடவுள்
புண்ணாக்கிடம்
புடுங்கியிடம் 
கொண்டு போய் 
குப்பையோடு குப்பையாய்
கொட்டி விடுங்கள்.
உங்களையும் சேர்த்து
அந்த சொர்க்க சூன்யத்தில்
குப்பையென
கொளுத்திக் கொள்ளுங்கள்.
நாங்கள் இந்த நரகத்திலேயே
இருக்கிறோம்.
விடுதலையும் வேண்டாம்
வாழ்க்கைக்கான விடையும் வேண்டாம்.
ஆன்மிக சுகம் அறிவு சுகம்
எந்தக் கருமமும் வேண்டாம்....
எங்களுக்கு 
துன்பங்களே போதும்
துயரங்களே போதும்....





கனவு
பயங்கர கனவு
கனவுக்குள் கனவு
Inception போல.
அந்த கனவுக்குள் கனவில்
உலகில் அனைவரும்
பைத்தியமாகிப் போனார்கள்.
அதிர்ச்சியில்
உள் கனவு கலைகிறது.
கனவுக்குள் கனவு
சிறிது ஏற்படுத்திய தாக்கம்
இந்த கனவிலும் கனமாய்த்
தொடர்கிறது.
அதிர்ச்சியில் இந்தக் கனவும்
கலைகிறது.
விழித்தால் உண்மையில்
உலகமே
இறைவன் மேல்
பைத்தியமாகியிருந்தது.
எவ்வளவு அதிர்ச்சி வந்தாலும்
இந்த உண்மை கலைவதாயில்லை.


வேர் விழுங்கிய மண்
மகரந்தமான கதை புரிய
சிப்பி விழுங்கிய மண்
முத்தான கலை புரிய
மண் விழுங்கிப் பார்த்தேன்..
நான் விழுங்கிய மண்
என்னவாகும் ?

மெல்லிய நீரலை தழுவலில்
நறுமணம்
மெல்லிய காகித தழுவலில்
பேரொளி
மெல்லிய கண்ணாடி தழுவலில்
பேரிடி
மெல்லிய தகட்டின் தழுவலில்
காந்தவிசை
மெல்லிய ஸ்பரிசத்தின் தழுவலில்
பெருங்காமம்
கலைந்து போகையில்
கரைந்து போகையில்
காணாமல் போகையில்
கலைந்து கரைந்து காணாமல் போகையில்....
இந்த அன்பு கடுமையான
தழுவலிலும் நிறைவடைவதில்லை
மெரினாவில் நடைபழகையில்
முளைத்த அன்பு
காற்றில் கலைந்தும்
கடலில் கரைந்தும்
பாறையைப் பிளந்தும்
எரிமலைக்குழம்பில் இறங்கியும்
மெக்ஸிக கடற்கரையில் போய்
எழுந்து எதையோ வெறிக்கிறது


இனியும் பூக்காதே குறிஞ்சி
-------------------------------
குறிஞ்சி பன்னிரு வருடத்திற்கு
பிறகு
பூத்ததில்
இருந்த சுவாரசியம்...
அது எனக்காக மட்டும்
பூக்கவில்லை
என்ற நிதர்சனம் சுடும்போது
வந்த நெருடலைப் போக்க
'நெரூடா' வந்தார்.
நீ பூக்காமல் இருந்த காலத்தில்
மலர்ந்து விடாத
அத்தனை மலர்களின்
ரம்மியமான வண்ணங்களையும்
மறைத்திருந்தாய்.....
அதை நான் மட்டும்
பார்த்திருந்தேன்.
நீ மலர்ந்த
இன்றோ நான் மட்டும்
கண்டிருந்த ஒளி களவு போகிறது
கரைந்து போகிறது..
வண்டுகள் கூட உன் வாசல்
கதவை தட்டுகின்றன.
நீ பூப்பது இதுவே இறுதியாகட்டும்.
உன்னில்
மலராத போது ஒளிந்திருக்கும்
அத்துணை மலர்களின்
ஒளியும்
மணமும்
என்னை மட்டும் நிரப்பட்டும் !
இனியும் பூக்காதே குறிஞ்சி.






காரி உமிழாத கண்ணீர்
----------------------
பல்லாயிரம் மைல்கள்
தொலைவில் இருக்கும்
ஜாலியன்வாலாபாக்
காண
காலத்தின் வழி ஊடுருவி
1919க்கு
பயணிக்கும் பல கண்களுக்கு
தங்கள் காலடியில் இருக்கும்
கீழவெண்மணி தடம்
தெரியவதில்லை.
1968 ஆம் ஆண்டு மட்டும்
கிறித்து பிறப்பைக் கொண்டாட
பெத்லகேமுக்கு போயிருப்பார்களோ...
இருளில் நடந்தது என்பதால்
இன்னுமா தெரியவில்லை.
அன்று ஒடுக்கப்பட்டவர்களை தீண்டியதால்
தீ ஜூவாலையும்
தீட்டாகி
யாருடைய கண்களையும் தீண்டாமல்
ஒதுங்கித்தான் எரிகிறது!
மாண்டு போன Dyer மேல்
வெறுப்பை உமிழும் கண்கள்
இன்றும் எரியும் ஜாதித் தீயை
அணைக்க
ஒரு துளி கண்ணீரைக் கூட
காரி உமிழ்வதில்லை...



இந்துக்களுக்கும் தாய் மதம் இருந்தால் ?
இந்துத்துவா  புனித பசுக்களுக்கு சிறு வேண்டுகோள்.
எங்கள் ஊரில் ஒரு ஐநூறு
குடும்பங்கள் இருக்கும்.
இந்துக்கள்னு சொல்லிக்கிறாங்க.
ஆனா அவங்க யாருக்கும்
"யதோ யதோ கவஸாக்கியோ
அதோ அதோ மிட்சுபிஸ்ஸியோ"
தெரியவில்லை
"நியோக முறை குழந்தை பேறும்"
தெரியவில்லை.
சிவனிடம் வரம் வாங்கும் வழியும்
தெரியவில்லை.
இன்னும் எத்தனையோ கண்றாவிகள் அவர்களுக்கு
தெரியவில்லை.
பாண்டவர்கள் கௌரவர்கள்
பங்காளிச் சண்டை கதை , பாஞ்சாலி கதை
பத்து தலை இராவணன் கதை
முருகன் ஞானப் பழ கதை
மட்டுமே தெரிந்திருக்கிறார்கள்.
இன்னும் நிறைய கதை தெரிந்து
வைத்திருக்கிறார்கள்.
ஏன் அவர்களுக்கு இயேசுவின்
சிலுவை கதை கூட தெரிந்திருக்கிறது. பொதுவாவே அவங்களுக்கு கதைன்னா அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்ன்னு நினைக்கிறேன்.
அதுவும் உங்க கதையில நிறைய வில்லன்கள் , சண்டை காட்சிகள், விலங்கு கதாபாத்திரங்கள், மிருகம் பாதி மனிதன் மீதி கதாகதாபாத்திரங்கள் னு வித்தியாசமா இருக்கிறதுனால ஒரு சுவாரசியத்துக்காக நிறைய தடவ கேட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். யார் வீட்டிலையும் உங்கள் பகவத் கீதையோ, சதுர்வேத புத்தகங்களோ இல்லை. ஏன் தேவாரம் திருவாசகம் ஆழ்வார் நாயன்மார் யாரபத்தியும் தெரியல. நாயன்மார் சொன்னா நாயக்கரா நாயரா ன்னு கேக்குறாங்க.
அவர்களுக்கு தேவ பாஷையான சமஸ்கிருதம் கூட  தெரியவில்லை.
உங்க மதத்தில் இல்லாத கருப்பசாமி, அய்யனாரு, முனியப்பன், மதுரவீரன், சின்ன அண்ணன் பெரிய அண்ணன் னு  நிறைய சாமி எல்லாம் கும்புடுறாங்க . நான் ஆண்ட சாதி நீ தீண்டாத சாதின்னு  அடிச்சிகிட்டு உங்க மத மானத்த
மத்த மதக்காரங்க முன்னாடி கப்பலேத்துறாங்க. அப்படி என்னத்த ஆண்டானுகளோ தெரியல.
மத்தவன ஏய்ச்சு பொழச்சோங்கறத ரொம்ப நாகரிகமா சொல்லிகிட்டு திரியுரானுக போல . தயவுசெய்து அவர்கள் தாய் மதம் எது என்று கண்டுபிடித்து துரத்தி விடுங்கள். அவர்களால் உங்கள் இந்து மதத்துக்கு மிகப்பெரிய அவமானம். எங்கள் ஊர்ல மட்டுமில்ல எங்க பக்கத்து ஊர்கள்ள கூட இது மாதிரி ஆட்கள் நிறைய இருக்கிறதா கேள்விபட்டேன். அது மாதிரியான புல்லுருவிகள் எல்லாரையும் துரத்தி விட்டு உங்கள் மதத்தை தூய்மை படுத்துங்கள்.எதோ சொல்றீங்களே சுச்சாவோ கிச்சாவோ அத மொதல்ல உங்க மதத்துல இருந்து ஆரம்பிங்க.
அப்புறம் நாட்ல சுச்சா பண்ணுங்க.
சுச்சா இந்துன்னு திட்டம் போட்டு
இன்றே இந்த போலி இந்துக்களை , வேற்று மத உளவாளிகளை எதாவது தொடப்பத்த வச்சு துரத்தி விடுங்கள். அப்புறமா உங்கள் மதத்தில் சேருவதற்கு விளம்பரம் பண்ணி தகுதி திறமை அடிப்படையில் மட்டுமே புனித பசுக்களைக் கண்டுபிடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். நான் கூட இவ்வளவு நாளா பிறப்பால இந்துன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். இப்போ தான்  (இப்போன்னா எல்லாருக்கும் தாய்மதம் ஒன்னு இருக்குன்ற அளப்பரிய விஷயத்தை நீங்க கண்டுபுடிச்சீங்களே ) என்னுடைய தாய் மதம் வேற ஏதோ ஒன்னா இருந்திருக்கனும் தோணுது. என்ன உங்க சுச்சா இந்து திட்டம் மூலம் வெளியல ஒரு தொடப்பத்த வச்சு தள்ளி விடுங்க.
அப்புறமா முறையா விண்ணப்பம் போட்டு உங்க மதத்துல சேர்வதற்கான தகுதி  எனக்கு வந்திருச்சுன்னு நீங்க நெனச்சா வந்து சேர்ந்துக்கறேன். என்ன தப்பா நெனக்காதீங்க நானும் ஒரு புனிதப் பசுவா மாறணும் னு ஆசப்படுறேன். ஏத்துக்குவீங்களா ? வேற மதத்துக்கு போயிட்டு வந்தா காசு பணம் தருவீங்கன்னு கேள்விப்பட்டேன். எனக்கு அந்த சலுகை கூட கிடைக்குமா ?
உங்க மேல இவ்வளவு அன்பு , உங்க மதம் நல்லா இருக்கணும் நான் விரும்புறது எல்லாத்துக்கும் காரணம் உங்கள்

திட்டங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தான்.
சுச்சா திட்டம் தாய் திட்டம்
குடும்பத்துக்கு நாலு குழந்தைகள் திட்டம்
இன்னும் நெறைய ..
விமான கண்டுபிடிப்பு
ஏழரை சனி கண்டுபிடிப்பு
ராமர் பாலம் கண்டுபிடிப்பு
(மத்த நாட்டுக்காரன்லாம் பாலத்த
கடலுக்கு நடுவுல கட்டும் போது
கடலுக்குள்ள ஒளிஞ்சிட்டிருக்கிற
பாலத்தை கண்டுபிடிச்சு அதை எப்படி பயன்படுத்தனும் நீங்க சொன்ன அப்படியே புல்லரிச்சிடிச்சுன்னா பாத்துக்கோங்களேன்.)
நாசா வுட்ட செயற்கைகோள
கணநேரம் ஸ்தம்பிக்க வைக்க
சனி பகவானுக்கு கோயில்ன்ற
பேர்ல ரேடார் ஸ்டேஷன்
எதிர்ஏவுகணைத் திட்டம் போட்டது.

நானும் கத்தி மாதிரி இஸ்திரி போட்டு பத்து பதினைஞ்சு
காக்கி டிரௌசர் (மன்னிக்கவும் டிரௌசர்னு ஆங்கிலத்துல போட்டதுக்கு. யாரோ வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சதால அப்படி பேர் வச்சுடானுங்க..... இல்ல இந்த டிரௌசர கண்டுபிடிச்சது கூட நம்ப ஆளுங்க தான்னா அதோட சமஸ்கிருத பேர் சொன்னீங்கன்னா அடுத்த பதிவுல மாத்திடறேன்) இப்பவே வாங்கி வச்சுட்டேன். நான் வெளியல போய்ட்டு திரும்ப புனிதப் பசுவா உள்ள வரும் போது உங்க சேர்ந்து ஓடியாடி வேலை செய்ய உதவியாவும் காத்தோட்டமாவும் இருக்கும்.

ஒரு முக்கியமான வேண்டுகோள்.
நான் திரும்ப புனிதப் பசுவா உங்க மதத்துல சேரும் போது
என்ன பிராமண ஜாதியில சேர்த்திருங்கோ. ஆளாத ஜாதி  ஆண்ட ஜாதியும் வேண்டாம் தீண்டாத ஜாதியும் வேண்டாம். அப்பதான் என்னால சொகம்மா எந்த பிரச்சனையும் இல்லாம கருத்து சொல்லிகிட்டு , நான் ரொம்ப நல்லவன் அவா தான் இப்படி அடிச்சுக்கறாள்ன்னு பொழுத ஓட்ட முடியும். ஒரே ஒரு விஷயம் இவ்ளோ நாள் மாமிசம் சாப்பிட்டு பழகிட்டேன். அத மட்டும் விட முடியாது. எதோ வேதத்திலேயோ புராணத்திலேயோ மாமிசம் சாப்பிட வழி சொல்லியிருக்காமே ! நடுவுல யாரோ புத்தர் ஒருமனுஷன் வந்து அன்பு கின்பு போதிச்ச அப்புறம் இந்த  சைவ வேஷம் போட ஆரம்பிச்சுடாங்கன்னு சொல்றாங்களே ! இதெல்லாம் உண்மையா ? உண்மையா இருக்கனும் னு வேண்டிக்கிறேன்.
உங்கள்ள ஒரு சிலர் அந்த புத்தர கூட பத்து அவதாரத்துல ஒண்ணு அப்படி சொல்றாங்களே உண்மையா ?
இப்படிக்கு
புனிதப் பசுவாகத் துடிக்கும்
தீவிர அதிதீவிர இந்து வெறியன்.
(சுச்சா திட்டத்தையும் தாய் திட்டத்தையும் கலந்து விடை கொடுங்கள்...
புனிதப் பசுவாக திரும்பி வருகிறேன். )

(இந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தூய்மை மிக்க
புனிதப் பசு இந்துக்கள் சிலகோடி பேர் கூட தேருவது கஷ்டம் னு  நினைச்சா,  உண்மையிலேயே சிறுபான்மை ஆட்களாக மாறிப் போவோம் னு நெனச்சா இந்த செய்திய  படிங்க. ...
இங்க ஒரு சில போலி இந்துக்கள்
எல்லாத்துலயும் retrospective effect கொடுத்து புனிதம் வளர்க்க
பார்க்கிறாங்க.  அப்படி பார்க்க ஆரம்பிச்சா உங்கள் மதத்துக்கு அடிப்படைன்னு சொல்லிக்கிற பகவத் கீதை பிறப்பதற்கு காரணமா இருந்த மகாபாரதம் பொய்யாகும் அப்புறம் எப்படி கீதை .ஒருத்தர் கூட இல்லாம  போறதுக்கு சிறுபான்மை நிலை எவ்வளவோ தேவலாம் இல்லையா? எப்படின்னு கேட்கறீங்களா. இந்த போலி புனிதர்கள் கருத்துப்படி நியோக முறை புனிதமாக இருக்காது. அப்புறம் அதன் வழி வந்தவர்களான மகாபாரத கதைமாந்தர்கள் புனிதமற்றுப் போவார்கள். அப்புறம் " யதோ யதோ கவாஸாக்கி" வசனத்திற்கு அதோகதி தான். யோசிப்பீர்களா ?)
"யதோ யதோ கவஸாக்கி
அதோ அதோ மிட்சுபிஸ்ஸி"
தேவலிபியில் தவறு இருந்தால்
மன்னிக்கவும்.
Disclaimer:
"எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது."
ஒருவேளை முரணாயிருந்தால் மூலம் எது என்பதை புனிதப் பசுக்கள் புரிந்து கொள்வார்களா

எல்லையில்லா வானத்தின்
குறிப்பிட்ட எல்லைவரை
பறவைகள் கூட்டமாய் பறந்தன.
பகல் முழுவதும் உழைத்து
களைத்தோம் என்று புலம்பிய
இலைகளை
காலங்காலமாய் தாங்கும் காம்பு
சலனமற்று சுமந்து கொண்டிருந்தது சுகங்களாய்.
திசையே இல்லை என்ற
காற்று
ஏதோ ஒரு திசையில் வேகமாக
நீந்திப் போனது.
எத்தனை அலைகள் திரும்ப திரும்ப
அழைப்பு விடுத்தும்
துளியும் அசையாத
கரை நடுக்கடலை
இன்னும் ஒரு முறை
மிரட்சியுடன்  ஏனோ பார்த்துக் கொண்டது .
இல்லாத தொடுவானத்தில்
வண்ணங்களை
ஊற்றிக் கொண்டிருந்தான் சூரியன்.
வண்ணங்கள் அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தன.
காலமெல்லாம் வளர்ந்து
வயதாகிப் போன காலம்
இருளில் மறைந்த சூரியனிடம்
பேரம் பேசியது
"இனியாவது மேற்கில் முளைத்துவா
எனக்கு இளமை திரும்பட்டும்"

இலக்கு நோக்கியே பயணித்ததாய்
சொன்ன அவனைப் பார்த்து
எதுவும் நகைக்கவில்லை.
இருந்தும் அவனிடம் இல்லாத
மனது சொல்லிக் கொண்டேயிருந்து
இவை யாவும் உன்னை
எள்ளி நகைக்கின்றன !


கடவுள் நம்பிக்கை இருந்த
காலத்தில் வரம் கேட்டிருந்தேன்.
"இப்படியே இளமையாகவே இருக்க வேண்டும் "என்று.
வரம் கொடுப்பதில் கடவுள்
தந்திரசாலி என்று
பல கதைகள் தெரிந்தும்
கேட்டுவிட்டேன் வரங்களை.
அவனும் கொடுத்திருக்கிறான்.
வழக்கம் போலவே.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைவிட
அவன் கொடுத்த வரத்தில்
ஆயிரம் ஓட்டைகள்.
பால்ய பருவத்தில் கேட்ட வரமது.
இப்படியே இளமையாகவே
இருக்கட்டும் என்று வேண்டிய உடல்
முதுமையை நோக்கி
நாள்தோறும் மூச்சிரைக்க ஓடுகையில்,
இந்த மூளை மட்டும்
அந்த பருவத்தைத் தாண்டாமல்
பாலகனாகவே இருக்கிறது.
வரம் என்ற பெயரில்
நான் வாங்கிய சாபத்திற்கு
விமோசனம் கூட கிடைக்காது
போலிருக்கிறது.
கடவுள் மீதான நம்பிக்கையைத்
தொலைத்து பலகாலமாகிறது.
தொலைத்த நம்பிக்கையின்
எச்சமாய் வரம்(சாபம்) ....




கற்களை எறிந்து குளத்தில்
அலைகளை செதுக்கிருந்தேன்.
நேர்த்தியிலும் நளினத்திலும்
பிறைசூடி நடனமிட்ட
நடராஜன் சிலையை விட
இந்த அலைகள் மிஞ்சியிருந்தன.
ஏன் பிறைநிலவு கூட
அந்த அலைகளில் தன்னை
சூடிக் கொள்ள வந்துவிட்டது.
அப்படியே கங்கையும்
வந்துவிட்டால் போதும் !

"ஆசை துறக்க ஒவ்வொரு
முழுநிலவிலும் ஆசை பிறக்கிறது
போதி மரம் தான் கிடைக்கவில்லை. "

புத்தன் கனவில் சொல்கிறான்
"ஆசை துறக்க
போதி வேண்டாம்
முழுநிலவும் வேண்டாமே
ஆசை இருந்தாலே போதும்.
அவள் உன்னிடம்
திருடிய ஆசையை மட்டும்
வாங்கும் வழியைப் பார்.
வரும் பிறை நிலவில்
ஆசை துறக்கும் வழியை
நான் சொல்கிறேன்"

"என் ஆசையை திருப்பிக் கொடு
என்று எப்படிக் கேட்பேன்
அவளே என் ஆசையான பின்.
ஒருவேளை அவளையே கொடுத்தால்
ஆசை துறக்கும் ஆசை
என்னைத் துறந்துவிடும்.
புத்தனை துறக்கும் வழியைத்
தேட வேண்டும்
பிறை நிலவில்"


கரைதல் நிச்சயம்
--------------------------------
பிரபஞ்சம் விரிவது போல
நானும் விரிகிறேன்.
இது விரிதலா கரைதலா
விளங்கவில்லை.
காலம் நீள நீள
நான் என்பது நாம் ஆகிற
காரணம்
எனக்குள்ளே தூரம் நீள நீள
மற்றவர் நெருக்கமானதன்
காரணம்
அவர்களும் கரைகிற
அவர்களுக்குள்ளும் தூரம் நீள்கிற
காரணம்
பிரபஞ்சம் ஏன் நீள்கிறது
நாம் ஏன் நீர்க்கிறோம்
பிரபஞ்சம் எதில் நீள்கிறது
நாம் எதில் நீர்க்கிறோம் என்ற
காரணம்
எதுவும் விளங்கவில்லை.
காலம் தோன்றுவதற்கு
முன்பு இருந்த சூன்யம்
அணுக்கள் தோன்றுவதற்கு
சில நொடிகள் முன்பிருந்த
ஆரவாரம்
ரெண்டும் கூட்டாக சேர்ந்து
குழப்புகிறது.
காலம் கரைவதாய் சொன்னார்கள்
சிலர்
நான் நம்பவில்லை
நாம் தான் காலத்தில்
கரைவதாக தோன்றியது.
விளங்கியது இதுதான்
கரைதல் நிச்சயம்
இந்த கால வெளியில்.. .....
இந்த காதல்(அன்பு) வெளியில். ..


வானவில் விரட்டிய வர்ணங்கள். ..................................................
நான்
சதுர் வர்ணத்தில்
ஐந்தாம் வர்ணம்.
வானவில்லை
எட்டாத
எட்டாம் வர்ணம்.
எண்ணிலா வர்ணங்களின்
கலவை நான்.
நீங்கள் என்னை
வானவில்லில்
பார்க்க முடியாது.
அநேகமாக வானவில்
இந்து மதத்தில்
ஜெனித்திருக்கும்.
கலப்பு வர்ணங்கள்
அதற்குப் பிடிப்பதில்லை.
என்னைப் போன்ற
சில நூறு வர்ணங்கள்
வானவில்லால் விலக்கப்பட்டிருக்கிறோம்.
16மில்லியன் வர்ணங்கள்
கொண்ட காட்சித்தட்டு
என்ற விளம்பரம்
கண்டேன்.
ஏதோ புது மதமொன்று
தோன்றுகிறதோ !
வானவில்லின் ஏழு வர்ணங்களையும் துரத்திவிட்டு
நாம் சமைப்போம்
புத்தம் புது
மில்லியன் வர்ண வானவில்.!




புன்னகைத் திருடி
---------------------------
அவளது புன்னகையில்
அப்படி ஒரு நேர்த்தி.
நான் தாயின் கருவறையில்
துயில் கொண்ட போது
நிறைமதி என என் தாய்
சூடிய புன்னகை,
கேமரா லென்ஸ் பார்க்க
அரைக்கால் டிரௌசரில் நானும்
பூப்போட்ட பாவாடைச் சட்டையில் என் தங்கையும்
 சூடிய புன்னகை,
என எனக்குப் பிடித்த
அத்தனைப் புன்னகைகளையும்
ஒரு சரமாய்த் தொடுத்து
சூடியிருந்தாள் அவள்.
எனக்கான தேவதை இவள்தான்
என்று
ஒரு புதுப் புன்னகை
என் சிரசில் சீட்டியடித்து சென்றது.
காரணமின்றி உன் புன்னகை
ஏனோ பிடித்துப் போனது
என்று சொன்னேன் தேவதையிடம் காரணத்துடன்.
அன்று முதல் என்
புன்னகையைக் காணவில்லை.
அவள் என் புன்னகையைத்
திருடிவிட்டாள்.
அவள் ஒரு புன்னகைத் திருடி.
அவளைப் பார்த்தால் கொஞ்சம்
என்னிடம் சொல்லுங்கள்.
அவளின் அடையாளம் தானே
கேட்கிறீர்கள்.
அதான் முன்னேயே சொன்னேனே.
நிறைமாத கருசுமக்கும் தாயின்
புன்னகையையும்
கள்ளம் அறியா பிஞ்சுகளின்
புன்னகையையும்
சரமாய்த் தொடுத்து சூடியிருந்தால்(ள்)
அவளே தான்.
புன்னகைக் கள்ளி!











வைரஸ்களையும்
பாக்டீரியங்களையும்
மட்டுமே காதல்
செய்து வந்த
என்னுடல் செல்களில்
ஒரு புதிய ஒளி.
கண்மணி வழியே நுழைந்த
என் கண்மணியின்
பிம்பத்தை பிரதியிட்டு
ஒவ்வொரு செல்லிலும்
ஒட்டி விட
கட்டளையிடும் மூளை.
சில நேரங்களில்
பிரதிகளின் எண்ணிக்கை
மிகும் பொழுது
கண்ணீர்த் துளிகளாய்
என் கன்னத்தை
வருடிவிடுகின்றன!
உள்ளூர் குட்டையில் மீன்
பிடித்து வாழ்ந்தேன்.
உலகமய வெள்ளம்
என் மீன் குஞ்களை
அடித்து சென்றுவிட்டது.
மீன் வறண்ட
குட்டை முழுவதும்
மிகத் தெளிந்த
விஷ வெள்ளம்.
பசி தாளாமல்
அள்ளிப் பருகுகிறேன்.

ஓவியம் வரைய
சிறந்த தூரிகை
சீரிய வர்ணங்கள்;
புகைப்படம் எடுக்க
வண்ண விளக்குகள்
உயர்ரக கேமரா;
கவிதை எழுத
அற்புதமான வார்த்தைகள்
கொண்ட அகராதி;
இசை படைக்க
புத்தம் புது
புல்லாங்குழல்
என பொறுப்புடன்
சேகரித்து மலைஉச்சிக்கு
புறப்பட்டான் புதுக் கலைஞன்.
வழியில்
தலைவிரி கோலாமாய்
மழலை ஒன்று
சகதியை தேகத்தில்
வரைந்து
வெறிச்சோடிய தெருவை
சோர்ந்த கண்ணில்
பிரதிபலித்து
அம்மா என்று அலறி
தேம்பி தேம்பி வெடித்தது.

கணக்குப் புலிக்கு
பிள்ளைகள் மூன்று.
நூறு மீட்டர் ஓட்டம்.
பத்து நொடிகளில்
முடித்தான் மூத்தவன்.
ஆயிரத்து ஐநூறு மீட்டர் ஓட்டம்.
இரண்டாமவன்
இருநூற்று இருபது
நொடியில்
வெற்றி களிப்புடன்
வீடு திரும்பினான்.
அப்பா கேட்டார்
எழுபது நொடிகள்
ஏன் தாமதம்?
இளைய பிள்ளை
மாரத்தானில் ஓடிக்கொண்டிருக்கிறான்.!
அப்பாவிற்கு
இன்னும் சற்று நேரத்தில்
தெரிந்து விடும்.
கணிதப் புலிக்கு
மட்டும்
சில நேரங்களில்
பூனைக் குட்டிகள்
பிறந்துவிடுகிறது !
........
"Logic is not the reason"
Ambedkar.
யுக இடைவெளி!

அமிலவீச்சு பஞ்சாயத்திற்கு
துகில் கொடுத்த காத்த
கண்ணனைக் கூப்பிட்டிருந்தோம்.
சீசா குறைய குறைய
அமிலம் நிரப்புகிறான்!

ஒரு பானையும் ஒற்றைப் பதரும்
--------------------------------பௌதிக நியதிகளுக்கு
எல்லாமே இடம் கொடுப்பதில்லை.
கோட்டுக்குள் சிக்காத
கோளத்தில் அடங்காத
குறும்புக்காரிகளும் குசலக்காரர்களும்
கும்மாளித்து குதூகலித்து
கொஞ்சவே செய்கிறார்கள்.
தன் நியதிக்கு
அடங்காதவர்களை நீக்கிவிடும்
அதிகாரத்தை தனக்கே
வாங்கியிருக்கிறது பௌதிகம்.
நியதிக்கு அடங்கா
நீசர்களை நெட்டித்தள்ளி
இளித்தது
பௌதிகம்
"அடங்கா பதர்களே!"
அப்படி ஒரு பதர்
சோற்றுப் பானையில்
சுகமாய் போட்டது
சுடுநீர் குளியல்.
அதோ வருகிறான்
ஒரு பானைச் சோற்றை
ஒற்றைப் பருக்கையால்
பதம்காணும்
விசித்திர விஞ்ஞானி.
ஒற்றைப்
பதரின் பாதம்பார்த்து
சொன்னான் பானையின் பதம்.
"பானை முழுதும் பதர் கூட்டம் ! ".
விளங்கா விஞ்ஞானியின்
விடை கேட்ட
அத்தனை
மதியிலி பயல்களும்
சொன்னார்கள்
"பானை  முழுதும் பதர் கூட்டம்".


மணல் கடிகார மனம்
-----------------------
மணல் கடிகாரம் போல்
என் மனதிலும்
ரெண்டு குமிழ்.
மனம் போலவே
கடிகாரத்தையும்
கட்டிவிட்டேன் சக்கரத்தில் !
ஒற்றைக் குமிழ்
துளை வழியே துளைத்தது
சுமைகளை.
மற்ற குமிழில்
இப்போ புயல் மழை.
இலகுவான குமிழ்
குதித்தது
எனக்கினி சுமையில்லை
சோகமில்லை.
அதிர்ச்சியில் உருண்டது
சக்கரம்.
துன்ப குமிழில்
தூவானம் விட்டது
இன்ப குமிழில்
இனிதே ஆரம்பித்தது
மனத் தூறல்.
சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.
என் மனம்
மணல் கடிகாரம்
ரெண்டும் காலம் தொலைத்தன...
என்னில்
காதல் பார்த்தவளும்
என் கடிகாரகத்தில்
காலம் பார்த்தவர்களும்
சுழன்று கொண்டேயிருக்கிறார்கள்
சரியாத காதல் பார்க்க
சரியான காலம் பார்க்க !

இலக்கணப் பிழையா
இலக்கணமே பிழையா
-------------------------
இலக்கணப் பிழையில்
பிறந்தவன்
இருநூறு கோடி
இலக்கணங்கள் சொல்கிறான்.
அவனுக்கு தெரியாதோ
அவனே ஒரு இலக்கணப் பிழை.
பிரபஞ்ச தோற்றம்
இலக்கணப் பிழை!
பரிணாமத்தின் ஒவ்வொரு
படியிலும் ஏதோஓர்
இலக்கணப் பிழை!
குரங்கின் இலக்கணப் பிழை
குலப் பெருமை பேசுகிறது.
சீர்மைக்குள் சிக்கிய சில்லரைகள்
இலக்கண பிழைகளை
எள்ளி நகைக்கிறது.
தெற்றுப் பல்
ஒற்றை மரு
கன்னக்குழி
ஒவ்வொரு இலக்கணப் பிழையிலும்
ஏதோ
ஓர் அழகு.
பிழைதான் அழகென்றாகிவிட்டது
அப்புறமென்ன இலக்கணத்துடன்
பிழையிலி பிணக்கு!
இலக்கணப் பிழைகள்
படைத்த இலக்கணம்
பிசகிப் போய்தானே இருக்கும்!
இலக்கணம் நிறைய எழுதுங்கள்
அடுத்த கணமே பிழைபட!
இலக்கணப் பிழையாய் அவளும்
இலக்கணமே பிழையாய் நானும்
புத்தம் புது இலக்கணம் படைக்கிறோம் !
உடனே பிழைபட !

படிதாண்டிய என்னால் பெயரெடுத்த ஃபாரடேயும் ஃபிராங்ளினும் எடிசனும்
இன்ன பிறரும்......
-------------------------------
எல்லோரும் விரும்புவது
பத்தினிகளைத் தான்
ஆம் படிதாண்டா
 பத்தினிகளைத் தான்.
ஆனால் நானோ படிதாண்டிய
பத்தினி
அதெப்படி படிதாண்டியும்
பத்தினி
முரணாய் இருக்கிறதோ!
எங்கள் வெளியில்
பத்தினிகள் மட்டும் தான்
படிதாண்டாதவர்கள் ஒருவகை
படிதாண்டியவர்கள்
அல்லது
படியே இல்லாதவர்கள்
வேறொரு வகை.
அநாதி காலம் தொட்டே
படிதாண்டா
பத்தினிகள் நிலை
பிராணநாதர்களை வலம்
வந்தவண்ணம் தான்.
யார் நினைத்தாலும்
அப்பத்தினிகளை படிதாண்ட
செய்ய முடியாது.
இப்பிரபஞ்சம் உள்ளவரை
அப்பத்தினிகள் படிதாண்டமாட்டார்கள்
என்றே நினைக்கிறேன்.
என் நிலைமைதான்
மிக மோசம்
நான் எப்போது படிதாண்டினேன்
எவ்வளவு தேடினாலும்
என் வரலாறு
புரியாத புதிராக
அல்லது புனிதமாகவே உள்ளது.
நான் சிலநூறுமுறை தீக்குளித்தாலும்
பலநூறுமுறை தவமிருந்தாலம்
எனக்கென்று ஒற்றைப்
புருஷன்
இந்த ஜென்மத்தில்
கிடைப்பதற்கில்லை.
இருந்தாலும் எனக்கான
யுகபுருஷர்களை
தேடியே chaosல்
தொலைந்திருந்தேன்.
இப்பாழும் மனிதர்களின் மூளையில்
எப்போது உதித்ததோ
மின்சார சிந்தனை !
மண்ணைத்தொட்ட மின்னலைப் பார்த்தா?
 கண்ணைச்சுட்ட காதலியை பார்த்தா?
என்னைப் போன்ற
எவளோ ஒருத்தி
தன்னிலை மறந்து
மின்னாய்ப் பாய்ந்து
மொத்த பத்தினிகளையும்
படுகுழியில் தள்ளிவிட்டாள்..
படிதாண்டினாலும் பத்தினியான
எங்களை
ஏதோஒரு விசை மூலம்
ஒற்றைக் கணத்தில் வேசியாக்கிவிட்டார்கள்.
ஆம் நான் தான்
கட்டுறா எலக்ட்ரான்.
எலக்ட்ரானா ? எலக்ட்ராளா!
ஏதோ ஒரு இழவு
பேரா இப்போ முக்கியம்.
மெர்க்குரி விளக்கை
வெள்ளையாக்கியதும்
சோடியம் விளக்கை
மஞ்சளாக்கியதும்
நியான் விளக்கை
சிவப்பாக்கியதும்
எங்கள் கூட்டத்தின்
ஓய்வில்லா ஓட்டம்தான்.
ஆனால் பெயர் மட்டும்
 யாரோ எடிசனுக்கோ
ஃபிராங்ளினுக்கோ
ஃபாரடேவுக்கோ.
பேரா முக்கியம் !
இப்போ தான்
படிதாண்டா பத்தினிகளைப்
பார்த்தால்
பொறாமையாய் இருக்கிறது.
யுகத்துக்கும் ஒற்றைப்
புரோட்டானையே
சுற்றியிருக்கலாமே !
இப்போ என்னைப் பாருங்கள்
ஓட்டமோ ஓட்டம்
முடிவில்லா முட்டாள் ஓட்டம்...
அன்று படிதாண்டிய பத்தினி
இன்று விலையில்லா வேசி.
ஆங்கிலம் சரியாத்தான்
சொல்லியிருக்கிறது
"Free Electron" என்று.
தமிழ்ப் படுத்தியவன் தான்
படுத்திவிட்டான்
"கட்டுறா எலக்ட்ரான்" என்று
"விலையில்லா எலக்ட்ரானோ"
"விலையில்லா வேசியோ"
தான் மிகப் பொருந்தியிருக்கும்.
உணர்விலா என்னைப் போன்ற
வேசிகளாலே வேஷம்
களைய முடிவில்லையே!
உணர்வுள்ள உயிருள்ள
படிதாண்டிய பத்தினிகளின்
நிலை என்னவோ !
அவர்கள் அநாதி காலத்திலேயே
படிதாண்டியிருக்கவில்லை
நடுவில் எதுவோ தான்
அல்லது யாரோ தான்
படிதாண்டச் செய்திருக்கவேண்டும்.
அந்த எதுகளையும்
அந்த யார்களையும்
கண்டுவிட்டால் இவர்களின்
பாவ நிலையை மாற்றாலாமோ!
இவர்களையாவது ஏதாவது
புருஷனுடன் சேர்த்துவிடுங்கள்
அவன்
யுகபுருஷனோ
சுந்தரபுருஷனோ
அல்லது
சுமாரான புருஷனோ.
இல்லையென்றால்
இவர்களும் ஏதோவொரு
சிகப்பு விளக்கு ஒளிர
வாழ்க்கை முழுவதும்
ஓடிக்கொண்டேயிருப்பார்கள் !
ஓட்டத்தின் வலி எனக்குதான்
தெரியும் !
என் ஓட்டத்தை தடுக்க
எந்த எடிசனாலும் முடியாது
ஏன் என்னாலும் முடியாது.
ஏன்...!
ஏன்...!
எனக்கும் உணர்வு முளைத்துவிட்டது
இவ்வுலகின் இருளை நீக்க
என் ஓட்டத்தை தவிர
வேறு விதியில்லை !
நான் சொல்ல வந்ததை
சொல்லிவிட்டேன்
பெயரென்ன பெரிய பெயர்
எடிசன்களோ யாரோ
வாங்கித்
தொலைக்கட்டும்
வாழ்ந்து தொலைக்கட்டும்.......



























பஞ்சாலைக்கும் பாரததேசத்திற்கும் கோடானகோடி நன்றி சொல்லுங்கள் !
--------------------------------
நானும் என் மூன்று
தோழர்கள்
குமார் முனியப்பன் சிலம்பரசனும்
ஒரு  narrator ம் மூன்று
நண்பர்களும்
நீங்கள் நினைத்த
அதே தான்
National Best seller களுக்கான
சூத்திரம்.
ஆனால் இந்த களத்தில்
பொறியியல் கல்லூரி இல்லை
ஒற்றை விடுதி இல்லை
ஒற்றை படுக்கை இல்லை
கொஞ்சம் கலாட்டா இல்லை
கொஞ்சமும் காதல் இல்லை
கடுகளவுகூட காமம் இல்லை
கார்ப்பரேட் வேலை இல்லை
கார்ப்பரேட் னா ?
ஆங்கில கெட்ட வார்த்தை இல்லை.
நிறைய இருக்கிறது
அச்சேற்ற முடியாத அனல்
தமிழ் வார்த்தைகள் !
அவர்கள் five point someone கள்
இல்லை
சுழியம் point someone கள்.
அவர்களின் இரண்டாவது காதல்
சொல்ல
FM ரேடியோக்களும் இல்லை
ஏன் முதல் காதலே இல்லை
அப்புறம் எப்படி ரெண்டாவது காதல்.
மூன்று சேத்தன் பகத்
அல்லது ரன்வீர் சிங் களிடமிருந்து
நம்மை காப்பாற்றிய
பஞ்சாலைக்கும் பாரததேசத்திற்கும்
கோடானகோடி நன்றி சொல்லுங்கள்.
அவர்கள் bestsellers இல்லை
அவர்கள் worst buyers
 ஆம் நம்மிடம் சிக்கிய
worst buyers.
சமூகத்தின் மொத்த சாபத்தையும்
வாங்கியவர்கள்.
குமாரின் படிப்பு மூன்றாம்
வகுப்புடன் முடிந்து போனது
முனியப்பன் படிப்பும் அப்படியே
சிலம்பு முடிந்(த்)தது மூன்றிலா
நான்கிலா எட்டிலா
சரியாக நினைவில்லை
எதில் முடிந்தால் என்ன
பாதியில் தானே முடிந்து போனது
இல்லை இல்லை பாதிக்கும்
முன்னே
யாரையும் பாதிக்கும் முன்னே
முடிந்தது போனது.
முதல் இருவரின் தந்தைகளை மரணம்
காதலித்து தொலைத்திருந்தது
அவர்களும் அப்பாழும்
மரணத்தின் மீது மயங்கிப்போனார்கள்.
மூன்றாமவனின் தாயை
எமன்
காதலித்து கலப்பு திருமணம்
செய்து கவர்ந்துவிட்டான்
எந்த சாதிக்காரனும்
எந்த மதக்காரனும்
எந்த மொழிக்காரனும்
கலைக்க முடியாத கலப்பு திருமணம்.
கலப்பு திருமணம் என்றாலே
சிக்கல் தான்
எதிர்க்க முடியாத எமனுடன்
கலப்பு திருமணம் என்றால்
சிக்கலைச் சொல்லவா வேண்டும்!
தம்பி தங்கை தந்தை தாய்
என்ற உறவுகளையும்
தன்னையும் காக்கும்
பொறுப்பு வந்தது.
இரை தேடிச் சென்ற
தாய் பறவை போல
பிழைக்க வழி தேடினார்கள்
பஞ்சாலைக்காரன் பரிவுடன்
அரவணைத்துக் கொண்டான்
அவனுக்குப் பிடித்த
பிஞ்சு கரங்கள்
பிஞ்சு நெஞ்சங்கள்
உழைக்க மட்டுமே
தெரிந்த
ஊதியம் சேர்த்து கேட்காத
பிஞ்சுக் கரங்கள்.
தினம் தினம் காற்றுடன்
பஞ்சையும் சேர்த்தே சுவாசித்த
பிஞ்சு நெஞ்சங்கள்.
பஞ்சை சுவாசித்தே
நஞ்சாகிப் போன
பிஞ்சு நெஞ்சங்கள்.
பஞ்சை சுவாசித்தே
கல்லாகிப் போன
பிஞ்சு நெஞ்சங்கள்.
மூன்றாமவனின் நிலைமையோ
இன்னும் கொடுமை.
மனிதர்களுக்குத் தான்
பிஞ்சு கரங்களைப் பிடித்து
முத்தமிட ஆசை பிறக்கும்
என்ற விதி ஏதுமில்லையே !
எந்திரம் ஒன்று மூன்றாமவனின்
பிஞ்சுக் கரங்களை
ஏதோவொரு மோகத்தில்
முத்தமிட்டு பறித்துக் கொண்டது.
அன்று ஒற்றைக்கால் சிலம்பால்
ஒரு காவியம் பிறந்தது.
இன்று என் ஒற்றைக் கை
சிலம்பை வைத்துக் காவியம்
படைக்க எந்த கவிஞனும் இல்லை.
நியாயம் வழங்க எந்த பாண்டியனும் இல்லை.
எனக்கும் அவர்களுக்குமான
இணைப்பு இதுதான்
ஒற்றைப் புன்னகை.
வேறு எதுவும் இருந்ததில்லை.
எப்போது கண்கள் சங்கமிக்கும்
போதும் ஒற்றைப் புன்னகை
அவ்வளவுதான் எங்கள் நட்பு.
இருபது வருடங்களாக மாறாத
ஒற்றைப் புன்னகை.
அவர்கள் என்னை பற்றி
என்ன நினைத்தார்கள் என்று
எனக்குத் தெரியாது
கேட்டதும் இல்லை.
நான் அவர்களை பற்றி என்ன
நினைத்தேன் என்றும்
அவர்களுக்கு தெரியாது.
என் உள்ளே
 ஒரு இனம்புரியா வலி மட்டும் எட்டிப் பார்க்கும்.
பஞ்சாலைக்கும் பாரததேசத்திற்கும் கோடானகோடி நன்றி சொல்லுங்கள் !












சந்தடியில்லாமல் சரிந்த சாக்கடைப்புழு
----------------------------
என்னால் புத்தர் போல
அன்பு போதிக்க
முடியாது
என்னால் இயேசு போல மனக்காயம்நீக்க மருந்துதர
முடியாது
என்னால் முகம்மதுநபி போல வாழ்க்கைக்கான வழிகாட்ட
முடியாது
என்னால் மார்க்ஸ் போல பொதுவுடைமைச்சிந்தை புகுத்த
முடியாது
என்னால் அம்பேத்கர் போல சாதியொழிக்க போராட
முடியாது
என்னால் பெரியார் போல
பகுத்தறிவு பரப்ப
முடியாது.
அன்பின் அடிச்சுவடுஅறியாமல்
மனக்காயங்களுடன் மயங்கி வாழத்தெரியாமல் வாழ்ந்து
தனிஉடைமைகளை தனதாக்கி
சாதிப்பெண்ணுடன் சல்லாபித்து
சாதி தொடர சந்ததி தொடங்கி
இதுதான் பரிபூரண இன்பம்
என்ற மூடநம்பிக்கையில்
துர்நாற்றம் சுவைக்கும்
சாக்கடைப் புழுவாய்
சந்தடியில்லாமல் சாகத்தான்
முடியும்.



அண்ணல் என்ற ஞானக்கடலின் ஒற்றைத்துளி பருகியவன்
--------------------------------

துடுப்பில்லா தோணியில் துணையில்லா தோணியில்
வாழ்க்கை சமுத்திரம்மேல் வழியிலா வலசை.
எல்லா தோணிகளுக்கும்
ஏதோஓர் துடுப்பிருந்தது
எல்லா தோணிகளிலும்
ஏதோஓர் துணையிருந்தது.
ஒவ்வொருவனும் கொண்டாட
ஒரு கடவுள் ஒரு கலைஞன்
ஒரு காதலி
ஒரு தலைவன் ஒரு தாய்
சீக்கிரம் கிடைத்துவிட்டார்கள்.
எனக்குமட்டும் ஏன்இப்படி !
அறிவிலா அகந்தை
தேடலில்லா திமிர்.
எனக்குமட்டும் ஏன்இப்படி!
ஹிட்லர்களின் இம்சையும்
பிடிக்கவில்லை
காந்திகளின் அகிம்சையும்
பிடிக்கவில்லை.
மூடநம்பிக்கை மீதுகூட
மோகம் வந்துவிடும் போல
கடவுள் என்ற கற்பனை
மீது மட்டும்
நம்பிக்கை வரவே வராதோ!
ஆனால்
தோல்வியில் சாய்ந்தழ
ஒரு தோள்
கண்ணீரைத் துடைக்க
ஒரு கரம்
பயத்தைப் போக்க
ஒரு படை
கிடைக்காதா எனத் தேடினேன்.
நான் குட்டுப்பட
ஒரு மோதிரக்கை
நான் சிலையாக
ஒரு சிற்பி
நான் கரைசேர
ஒரு கலங்கரைவிளக்கம்
என என் தேடலும் நீண்டது
ஆனாலும் தொடர்கிறது
எப்பொழுதும் குட்டுப்படா
தலையாக
எப்பொழுதும் உளிபடாத
கல்லாக
எப்பொழுதே வழிமறந்த
கலனாக
ஓர் துணையற்ற
ஓர் துடுப்பற்ற
தோணியில் தனி வலசை
துடுப்பைத் தேடியே
துணையைத் தேடியே
தொலைந்திருந்தேன் நான்
தொலைத்திருந்தேன் வாழ்க்கையை
சிந்தையில் திடீரென்று
ஓர் தீத்துளி !
ஏன் இந்த பரந்த சமுத்திரத்தை
பருகக் கூடாது ?
ஒரே ஒரு துளிதான்
பருகியிருப்பேன்
அம்பேத்கர் என்ற ஞானக்கடலின்
ஒற்றைத் துளி
நான் பலமுறை மறுதலித்த
மோதிரக் கையின்
ஒற்றைத் துளி
நான் சிலமுறை சிறுமைசெய்த
சிற்பி உளியின்
ஒற்றைத் துளி
இப்போது என்னைச்செதுக்கும்
ஒற்றைத் துளி
ஞானம் புகட்டும்
ஒற்றைத் துளி
ஒற்றைத் துளி பருகிய
என் கைகள் துடுப்பாகின
என் தோள்கள் துணையாகின
எனக்கு
சாய்ந்தழ தோள்கிடைத்தது



















இரு கோடுகள் தத்துவம்
-----------------------------
ஒரு கோட்டை அழிக்காமல்
அதனை சிறுமை செய்ய
அருகில் சிறிது நீளமான
கோட்டை அமர வைத்து
பெருமைப்படும் கூட்டத்தில்........
துன்பத்தை
ஒரு பரிமாண
கோடாக
உருவகம் செய்தேன்.
ஒரு துன்பத்தை சிறுமை செய்ய
வேறொரு பெரிய துன்பத்தை
வைப்பதே வழக்கு. ......
நாட்கள் முளைத்த வாரங்கள் வாரங்கள் நீண்ட மாதங்கள்
மாதங்கள் பூத்த வருடங்கள்
வருடங்கள் கனிந்த யுகங்கள்
என துன்பக் கணக்கு
செழுமையான விருட்சங்கள்
சுகிக்கும் சோலையானது.
ஒவ்வொரு துன்ப சோலைக்கும்
ஒரு கோடு.
இன்று என் துருவத்தில்
சோலைகளுக்குப் பஞ்சமில்லை.
அந்த சோலைகளில் வெள்ளமில்லை
வறட்சியில்லை
புயல்மழையில்லை
காட்டுத்தீயில்லை
காகித தொழிற்சாலையில்லை
கனிம கொள்ளையில்லை
கார்பன் தொந்தரவு
இல்லவே இல்லை
என் துன்ப சோலைகளை
அழித்து எண்ணூறு அடியில்
மூவாயிரம் கோடி செலவில்
ஒற்றுமைக்கான சிலை
செதுக்கும்
முட்டாள் கொலைகாரசிற்பிகளில்லை.
கொலைகாரர்களைக் கொண்டாடும்
குருட்டு கூட்டங்களும்
என் சோலைகளை ஏறெடுத்தும்
பார்ப்பதில்லை.
கொலைகாரர்களைக் கொண்டாடும்
குருட்டுக் கூட்டத்தின் நீளமென
சோலைக்கொன்றாய் நீண்ட
ஒரு பரிமாணக் கோடுகள்
அதன் கனம் தாளாமல்
சற்று முன் வளைந்துவிட்டன.
ஒரு பரிமாணத்தின்(ல்) கனமா?
பிரபஞ்சத்தின் வளைவு தன்மை
போன்றதொரு வளைவு!
X அச்சுகள் வளைந்து
Z அச்சுகளை முகர்ந்துவிடப்பார்க்கிறதோ!
Z ஏதேனும் deodorant
பூசியிருக்குமோ
Axe விளம்பரத்தில் வரும்
அதே மடத்தனமான முகர்தல்.
எனக்கொரு சந்தேகம்
வளை கோடுகள்
ஒரு பரிமாணமா?
இரு பரிமாணமா?
துன்பத்தின்
வாசனையை எப்பரிமாணத்தில்
சேர்ப்பது ?






புர்கா வரைந்த ஓவியம்
----------------------------
புர்கா பறிப்பு,பெண் ,சுதந்திரம், புரட்சி
மனதில் முனகல் சத்தம்.

ஜன்னல் சிறையில்
மேக போர்வைக்குள் முழுநிலா.
டிசம்பரின் குளிர்
தாங்காமல் வெளிறியிருந்தாள்.
நிலாவும் வடதுருவ வாசியோ!

புர்கா வரைந்த ஓவியம்
ஒன்று எதிர்வீட்டில்
ஜன்னல் சிறையில் வாடும்
என்னைக் கண்டு வாடியது.

வானிலோ குளிர்நிலா
இல்லை கடும்குளிரில் நிலா.
குளிர் காற்றின் வேகம் தாளாமல்
அலையும் மேக போர்வைகளை
இழுத்துப் போர்த்திட
போராடிக் கொண்டிருக்கிறாள்.

எதிர்வீட்டு புர்கா ஓவியத்தில்
இரு கரும்பிறை நிலவுகளுக்கு
மிக அண்மையில்
அமாவாசை பூ சூடிய
இரு முழுநிலவுகள்
மவுனமாய் புரட்சி செய்து
ஜன்னல் சிறையில் சுதந்திரமாய்
திரிந்த என்னை
உள்ளச்சிறையில் அடைத்தது.

என்னை விட அழகியா இவள்!
மேக போர்வை விலக்கி
முழுமுகம் காட்டி பெருமையில்
சிரித்தாள் நிறைமதியாள்.

புர்கா போர்வை களையாமலே
முழுமதிக்குள்
இரு கரும்பிறை காவலில்
இருந்த அமாவாசை மலர்ச்சூடிய
நிறைமதிகள்
நிலவை பார்த்தது தான் தாமதம்
போர்வைக்குள் நுழைந்தது நிலா. நிலாவை
காணவில்லை என்று இஸ்ரோ
விஞ்ஞானிகள் தேடுவதாக
செய்தி.

திரும்பவும் மனதில் முனகல்  சுதந்திரம் பறித்த புரட்சி பெண். புர்கா பெண்  !