Saturday 13 September 2014


கனவு வெளியில்......

ஏகாந்த மோனத்தில்
திரள் கனவு
விந்தைகளை எண்ணி
விரைகின்றேன் வீடுதேடி
என்காலில் இடர்ப்பட்டது
ஒரு கருங்கோளம்
நல்ல வேளை காயம்படவில்லை
தெருக் கல் தானே என்று
திரும்பவுமில்லை
காத தூரம் கடந்திருப்பேன்...
பேரொளி
பெருஞ்சத்தம்
பெரும்புயல்
பெருவெள்ளம்
சிந்தைக்கெட்டுவதற்குள் சிதைத்த
பெருவெடிப்பு
ஒரு பிரளயம் உருவாகிறது
ஒரு பிரபஞ்சம் உருவாகிறது.
ஆம் தடுக்கியது வெறும்
தெருக் கல் அல்ல
ஒரு பிரபஞ்சம்
ஒளிந்திருந்த
பூரணப் பொருண்மை
பரிபூரணப் பொருண்மை
இனம்புரியா இன்பம்
பிரளயத்தைக் கண்ட
முதல் மனிதன்
பெரு வெடிப்பைக் கண்ட
முதல் மனிதன்
பரிபூரணத்தைக் கண்ட
முதல் மனிதன்
பிரமிப்பில் பேதலித்து
விரைகின்றேன் வீடுதேடி
வழியெங்கும் வண்ணமிலா
கருங்கோளம்
எது கல்
எது கருந்துளை
எது பரிபூரணப்பொருண்மை
என்ற புரிதல் இல்லை
அடிமேல் அடிவைத்து
நடக்கின்றேன்
சிற்சில பிரளயங்கள்
பற்பல பிரபஞ்சங்கள்
உருவாகிக் கொண்டேயிருந்தன
எண்ணிலா பூரணங்கள்
வெடித்துவிடக் காத்திருக்கின்ற
எண்ணிலா பிரளயங்கள்
பெயர்த்தெறிய காத்திருக்கின்ற
எண்ணிலா பிரபஞ்சங்கள்
பிறக்க காத்திருக்கின்ற
எது காயத்திற்கான காத்திருப்பு
எது காலத்திற்கான காத்திருப்பு

எவை கல்லடிபடா காயங்கள்
கனவு வெளியில்....... 

No comments:

Post a Comment