Monday 26 January 2015

நடந்தது என்ன ?
-------------------
கதிரவன் மீது வந்த புகாரைப் பாருங்கள்.

இரவு  தன்னை
கடத்தியதாய் இட்டுகட்டியது.
கடல்  தன்னில்
முழுகி எழுவதாய் கதை சொன்னது.
வானம் நீலம் மஞ்சள் சிவப்பு என சாயமூற்றி
ஹோலி கொண்டாடி
வஞ்சித்தான் என வெடித்தது.
மலர் தன்னைப்
பார்வையால் கொல்(ள்)வதாய்
மருகி நின்றது.
பனித்துளி தன்னை
களவாடியதெப்படி என்ற
காரணம் சொன்னது...

நடந்தது என்ன ?

கதிரவன்
பேரன்புடன்
கோடி கரங்களை விரித்தபடி
கோடி ஆண்டுகளாய் இப்பிரபஞ்சத்தில்
சுற்றுலா போகிறான் குடும்பத்துடன்.

அவன்
இறப்பை நோக்கியோ
இலக்கை நோக்கியோ
பயணிப்பதில்லை.
கோடி கரங்கள் விரித்தபடி
குடும்ப பயணம் மட்டும் தான்.
அது திசையில்லா பயணம்
திக்கு திசையில்லா பிரபஞ்ச
வெளியில்
புரியாத பயணம்
புதிரான பயணம்
அந்தப் பயணத்தில்
கொள்கை இல்லை
குறிக்கோள் இல்லை
குறுக்கீடு இல்லை....

அந்த கரங்கள் யாரையும்
அணைப்பது கூட இல்லை. .
அவன் கரங்கள் நீண்டிருக்கின்றன அவ்வளவே.

இருள் அவன் கரங்கள் இடையே
ஒளிந்து கொள்கிறது.
இருள்
ஒளிந்து கொண்ட கடத்தல்
நாடகம் இது.

கடல் அந்த கரங்களை
ஆரத் தழுவிக் கொள்கிறது.
கடல்
தழுவிக் கொண்ட
தாப நடனமிது.

வானம் அந்த கரங்களை முறுக்கி
சித்ரவதை செய்து
வண்ணங்களை பிழிகிறது.
வண்ணம் பிழியும்
வானத்தின்  நிஜ
ஹோலி இது.

மலரின் புகார் தான்
புழுகின் உச்சம்
அண்டப் புழுகு ஆகாசப் புழுகில்லை
அது
பிரபஞ்ச புழுகு.
கரங்களில் ஏது பார்வை !
இல்லாத  பார்வையால் கொல்ல எப்படி முடியும்.
கதிரவன் கரங்கள் மலரினும்
மெல்லியதாயிற்றே
அதனால் மலர்களைக் கொள்ளவும் முடியாதே.

மலரின் இதழ்கள் கதிரவனின்
கரங்களை முத்தமிடுவதை
நீங்களே பாருங்கள்.
இதழ் முத்தத்தால் கரங்களை
மயக்கிவிட்டு
பார்வையால் கொல்(ள்)வதாய்
பசப்புகிறாள்.
மயங்கிய கரங்களின்
முத்தக் களிப்பு அது
மீளாத களைப்பு அது.

பனித்துளி கதிரவன்  கரங்களைக்
களவாடி இறக்கை செய்து
பறந்து போகிறது.
காற்று வெளியில் காதல்
கொண்டு
ஓடிப்போன பனித்துளி இது.
இது ஒரு களவாணியின் காதல்.



நான் மிகப் பெரியவன்
எல்லாப் புகழும் எனக்கே
நான் இன்றி ஒரு அணுவும்
அசையாது
என்று
பீற்றித் திரிந்த
வக்ரம் பிடித்த
மனநிலை பாதிக்கப்பட்ட
இறைவன் என்ற பெயரில்
உலாவி வந்த
சிலர்
இன்று தான்
உண்மையாக
தூண்களிலும் துரும்புகளிலும்
ஒளிந்திருக்கிறார்கள்......
துப்பாக்கிக் குண்டுக்கு பயந்து

தீண்டாமையை மறுத்த
ஜாதியும்
தீவிரவாதத்தை மறுத்த
மதமும்.....

"எனக்கு ஜாதியில் நம்பிக்கை
உண்டு
ஆனால் அனைத்து ஜாதிகளும்
சமம் என்பேன்"
என்பவன் எப்படி கடைந்தெடுத்த
ஜாதி வெறியனோ !
அப்படித்தான் இந்த மதவெறியர்களின் சகோதரத்துவமும்
"கடவுள் நம்பிக்கை உண்டு
ஆனால் தீவிரவாதியில்லை"
பச்சையான அபத்தம்.
" Boko haram" "Taliban"
மறுமையில் சுகம் தேடும்
மார்க்க வெறியர்களே நீங்கள்
வாழவே தகுதியற்ற ஜென்மங்கள். உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை
இருந்தால்உடனேசெத்து
எல்லாம் வல்ல அந்த அவனிடம்
போய்ச் சேர்ந்து தொலையுங்கள்
எல்லாப் புகழையும் அங்கேயே
பரப்புங்கள்...
இங்கே நரகத்தில்
இருந்து எங்களை மீட்கும்
மீட்பர் பணிக்கும்
 வாழ பழக்கவும்
தீமையை ஒழிக்கவும்
அன்பை பழக்கவும்
யாரும் வேண்டாம்....
உங்கள் ஆன்மிக வெங்காயமும்
வேண்டாம்
ஐந்து வேளைத் தொழுகை
வேண்டாம்
பத்து கட்டளைகள் வேண்டாம்
தம்மங்கள் வேண்டாம்
போதனையும் வேண்டாம்
புண்ணாக்கும் வேண்டாம்
கருணை வேண்டாம்
காருண்யம் வேண்டாம்
நாங்கள் துன்பத்திலே
சாகிறோம்
எங்களை விட்டுவிடுங்கள்
தினம் தினம் கொல்லாதீர்கள்.
லீனா மணிமேகலை எழுதிய
இரண்டு கவிதைகள் நினைவில்
குத்துகிறது..
பட்டப் பகலில்
நட்ட நடு வீதியில்
நிர்வாணப்படுத்தி
சவுக்கால் அடித்தது போன்ற
வலி கொடுத்த அந்த எழுத்துகள்
இவ்வுலகில் ஆண்கள்
எல்லோரும் எப்படி
ஓரே மாதிரியாய் இருக்கிறார்கள்
என்ற கேள்வியில் ஆண்களின்
தோல்
நிர்வாணத்தைத் தாண்டியும்
உரிக்கப்படுகிறது.
அதே போல
கடவுள் மீது நம்பிக்கை
உள்ளது
ஆனால் நான் தீவிரவாதியில்லை
என்று எவன் சொன்னாலும்
இனி சர்வ ஜாக்ரதையாய்
இருக்க வேண்டும்.....
இனி எவனாவது
நான் கடவுள் நம்பிக்கை
உள்ளவன் என்றால்
அவனை கொன்றுவிட மனம்
துடிக்கிறது
லால் கிருஷ்ணனும்
இலங்கை புத்தனும்
குஜராத் காவிகளும்
உலகெங்கும் இஸ்லாமியன்களும்
உலகெங்கும் கிறித்தவன்களும்
பாலஸ்தீனத்தில் யூதன்களும்
உலகெங்கும் கம்யூனிஸ்டுகளும்
கொலை மீது
அளவு கடந்த அன்பு கொண்டு
நடத்தும் 
அட்டூழியங்களைக் கேட்டாலே
கொலை வெறி வருகிறது......
நம்பிக்கை என்ற 
வார்த்தையைக் கேட்டாலே
வயிறு எரிகிறது. ..
உங்கள் கோட்பாடுகளையும்
கொள்கைகளையும்
குருட்டுத்தனங்களையும்
கோமாளித்தனங்களையும்
எல்லாவல்ல
எல்லையில்லாத
உருவமில்லாத
உங்களைக் காத்தருளும்
சொர்க்கம் தரும்
சுகம் தரும்
அந்த பெரிய கடவுள்
புண்ணாக்கிடம்
புடுங்கியிடம் 
கொண்டு போய் 
குப்பையோடு குப்பையாய்
கொட்டி விடுங்கள்.
உங்களையும் சேர்த்து
அந்த சொர்க்க சூன்யத்தில்
குப்பையென
கொளுத்திக் கொள்ளுங்கள்.
நாங்கள் இந்த நரகத்திலேயே
இருக்கிறோம்.
விடுதலையும் வேண்டாம்
வாழ்க்கைக்கான விடையும் வேண்டாம்.
ஆன்மிக சுகம் அறிவு சுகம்
எந்தக் கருமமும் வேண்டாம்....
எங்களுக்கு 
துன்பங்களே போதும்
துயரங்களே போதும்....





கனவு
பயங்கர கனவு
கனவுக்குள் கனவு
Inception போல.
அந்த கனவுக்குள் கனவில்
உலகில் அனைவரும்
பைத்தியமாகிப் போனார்கள்.
அதிர்ச்சியில்
உள் கனவு கலைகிறது.
கனவுக்குள் கனவு
சிறிது ஏற்படுத்திய தாக்கம்
இந்த கனவிலும் கனமாய்த்
தொடர்கிறது.
அதிர்ச்சியில் இந்தக் கனவும்
கலைகிறது.
விழித்தால் உண்மையில்
உலகமே
இறைவன் மேல்
பைத்தியமாகியிருந்தது.
எவ்வளவு அதிர்ச்சி வந்தாலும்
இந்த உண்மை கலைவதாயில்லை.


வேர் விழுங்கிய மண்
மகரந்தமான கதை புரிய
சிப்பி விழுங்கிய மண்
முத்தான கலை புரிய
மண் விழுங்கிப் பார்த்தேன்..
நான் விழுங்கிய மண்
என்னவாகும் ?

மெல்லிய நீரலை தழுவலில்
நறுமணம்
மெல்லிய காகித தழுவலில்
பேரொளி
மெல்லிய கண்ணாடி தழுவலில்
பேரிடி
மெல்லிய தகட்டின் தழுவலில்
காந்தவிசை
மெல்லிய ஸ்பரிசத்தின் தழுவலில்
பெருங்காமம்
கலைந்து போகையில்
கரைந்து போகையில்
காணாமல் போகையில்
கலைந்து கரைந்து காணாமல் போகையில்....
இந்த அன்பு கடுமையான
தழுவலிலும் நிறைவடைவதில்லை
மெரினாவில் நடைபழகையில்
முளைத்த அன்பு
காற்றில் கலைந்தும்
கடலில் கரைந்தும்
பாறையைப் பிளந்தும்
எரிமலைக்குழம்பில் இறங்கியும்
மெக்ஸிக கடற்கரையில் போய்
எழுந்து எதையோ வெறிக்கிறது


இனியும் பூக்காதே குறிஞ்சி
-------------------------------
குறிஞ்சி பன்னிரு வருடத்திற்கு
பிறகு
பூத்ததில்
இருந்த சுவாரசியம்...
அது எனக்காக மட்டும்
பூக்கவில்லை
என்ற நிதர்சனம் சுடும்போது
வந்த நெருடலைப் போக்க
'நெரூடா' வந்தார்.
நீ பூக்காமல் இருந்த காலத்தில்
மலர்ந்து விடாத
அத்தனை மலர்களின்
ரம்மியமான வண்ணங்களையும்
மறைத்திருந்தாய்.....
அதை நான் மட்டும்
பார்த்திருந்தேன்.
நீ மலர்ந்த
இன்றோ நான் மட்டும்
கண்டிருந்த ஒளி களவு போகிறது
கரைந்து போகிறது..
வண்டுகள் கூட உன் வாசல்
கதவை தட்டுகின்றன.
நீ பூப்பது இதுவே இறுதியாகட்டும்.
உன்னில்
மலராத போது ஒளிந்திருக்கும்
அத்துணை மலர்களின்
ஒளியும்
மணமும்
என்னை மட்டும் நிரப்பட்டும் !
இனியும் பூக்காதே குறிஞ்சி.