Monday 26 January 2015

பஞ்சாலைக்கும் பாரததேசத்திற்கும் கோடானகோடி நன்றி சொல்லுங்கள் !
--------------------------------
நானும் என் மூன்று
தோழர்கள்
குமார் முனியப்பன் சிலம்பரசனும்
ஒரு  narrator ம் மூன்று
நண்பர்களும்
நீங்கள் நினைத்த
அதே தான்
National Best seller களுக்கான
சூத்திரம்.
ஆனால் இந்த களத்தில்
பொறியியல் கல்லூரி இல்லை
ஒற்றை விடுதி இல்லை
ஒற்றை படுக்கை இல்லை
கொஞ்சம் கலாட்டா இல்லை
கொஞ்சமும் காதல் இல்லை
கடுகளவுகூட காமம் இல்லை
கார்ப்பரேட் வேலை இல்லை
கார்ப்பரேட் னா ?
ஆங்கில கெட்ட வார்த்தை இல்லை.
நிறைய இருக்கிறது
அச்சேற்ற முடியாத அனல்
தமிழ் வார்த்தைகள் !
அவர்கள் five point someone கள்
இல்லை
சுழியம் point someone கள்.
அவர்களின் இரண்டாவது காதல்
சொல்ல
FM ரேடியோக்களும் இல்லை
ஏன் முதல் காதலே இல்லை
அப்புறம் எப்படி ரெண்டாவது காதல்.
மூன்று சேத்தன் பகத்
அல்லது ரன்வீர் சிங் களிடமிருந்து
நம்மை காப்பாற்றிய
பஞ்சாலைக்கும் பாரததேசத்திற்கும்
கோடானகோடி நன்றி சொல்லுங்கள்.
அவர்கள் bestsellers இல்லை
அவர்கள் worst buyers
 ஆம் நம்மிடம் சிக்கிய
worst buyers.
சமூகத்தின் மொத்த சாபத்தையும்
வாங்கியவர்கள்.
குமாரின் படிப்பு மூன்றாம்
வகுப்புடன் முடிந்து போனது
முனியப்பன் படிப்பும் அப்படியே
சிலம்பு முடிந்(த்)தது மூன்றிலா
நான்கிலா எட்டிலா
சரியாக நினைவில்லை
எதில் முடிந்தால் என்ன
பாதியில் தானே முடிந்து போனது
இல்லை இல்லை பாதிக்கும்
முன்னே
யாரையும் பாதிக்கும் முன்னே
முடிந்தது போனது.
முதல் இருவரின் தந்தைகளை மரணம்
காதலித்து தொலைத்திருந்தது
அவர்களும் அப்பாழும்
மரணத்தின் மீது மயங்கிப்போனார்கள்.
மூன்றாமவனின் தாயை
எமன்
காதலித்து கலப்பு திருமணம்
செய்து கவர்ந்துவிட்டான்
எந்த சாதிக்காரனும்
எந்த மதக்காரனும்
எந்த மொழிக்காரனும்
கலைக்க முடியாத கலப்பு திருமணம்.
கலப்பு திருமணம் என்றாலே
சிக்கல் தான்
எதிர்க்க முடியாத எமனுடன்
கலப்பு திருமணம் என்றால்
சிக்கலைச் சொல்லவா வேண்டும்!
தம்பி தங்கை தந்தை தாய்
என்ற உறவுகளையும்
தன்னையும் காக்கும்
பொறுப்பு வந்தது.
இரை தேடிச் சென்ற
தாய் பறவை போல
பிழைக்க வழி தேடினார்கள்
பஞ்சாலைக்காரன் பரிவுடன்
அரவணைத்துக் கொண்டான்
அவனுக்குப் பிடித்த
பிஞ்சு கரங்கள்
பிஞ்சு நெஞ்சங்கள்
உழைக்க மட்டுமே
தெரிந்த
ஊதியம் சேர்த்து கேட்காத
பிஞ்சுக் கரங்கள்.
தினம் தினம் காற்றுடன்
பஞ்சையும் சேர்த்தே சுவாசித்த
பிஞ்சு நெஞ்சங்கள்.
பஞ்சை சுவாசித்தே
நஞ்சாகிப் போன
பிஞ்சு நெஞ்சங்கள்.
பஞ்சை சுவாசித்தே
கல்லாகிப் போன
பிஞ்சு நெஞ்சங்கள்.
மூன்றாமவனின் நிலைமையோ
இன்னும் கொடுமை.
மனிதர்களுக்குத் தான்
பிஞ்சு கரங்களைப் பிடித்து
முத்தமிட ஆசை பிறக்கும்
என்ற விதி ஏதுமில்லையே !
எந்திரம் ஒன்று மூன்றாமவனின்
பிஞ்சுக் கரங்களை
ஏதோவொரு மோகத்தில்
முத்தமிட்டு பறித்துக் கொண்டது.
அன்று ஒற்றைக்கால் சிலம்பால்
ஒரு காவியம் பிறந்தது.
இன்று என் ஒற்றைக் கை
சிலம்பை வைத்துக் காவியம்
படைக்க எந்த கவிஞனும் இல்லை.
நியாயம் வழங்க எந்த பாண்டியனும் இல்லை.
எனக்கும் அவர்களுக்குமான
இணைப்பு இதுதான்
ஒற்றைப் புன்னகை.
வேறு எதுவும் இருந்ததில்லை.
எப்போது கண்கள் சங்கமிக்கும்
போதும் ஒற்றைப் புன்னகை
அவ்வளவுதான் எங்கள் நட்பு.
இருபது வருடங்களாக மாறாத
ஒற்றைப் புன்னகை.
அவர்கள் என்னை பற்றி
என்ன நினைத்தார்கள் என்று
எனக்குத் தெரியாது
கேட்டதும் இல்லை.
நான் அவர்களை பற்றி என்ன
நினைத்தேன் என்றும்
அவர்களுக்கு தெரியாது.
என் உள்ளே
 ஒரு இனம்புரியா வலி மட்டும் எட்டிப் பார்க்கும்.
பஞ்சாலைக்கும் பாரததேசத்திற்கும் கோடானகோடி நன்றி சொல்லுங்கள் !












No comments:

Post a Comment