Monday 26 January 2015


எல்லையில்லா வானத்தின்
குறிப்பிட்ட எல்லைவரை
பறவைகள் கூட்டமாய் பறந்தன.
பகல் முழுவதும் உழைத்து
களைத்தோம் என்று புலம்பிய
இலைகளை
காலங்காலமாய் தாங்கும் காம்பு
சலனமற்று சுமந்து கொண்டிருந்தது சுகங்களாய்.
திசையே இல்லை என்ற
காற்று
ஏதோ ஒரு திசையில் வேகமாக
நீந்திப் போனது.
எத்தனை அலைகள் திரும்ப திரும்ப
அழைப்பு விடுத்தும்
துளியும் அசையாத
கரை நடுக்கடலை
இன்னும் ஒரு முறை
மிரட்சியுடன்  ஏனோ பார்த்துக் கொண்டது .
இல்லாத தொடுவானத்தில்
வண்ணங்களை
ஊற்றிக் கொண்டிருந்தான் சூரியன்.
வண்ணங்கள் அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தன.
காலமெல்லாம் வளர்ந்து
வயதாகிப் போன காலம்
இருளில் மறைந்த சூரியனிடம்
பேரம் பேசியது
"இனியாவது மேற்கில் முளைத்துவா
எனக்கு இளமை திரும்பட்டும்"

இலக்கு நோக்கியே பயணித்ததாய்
சொன்ன அவனைப் பார்த்து
எதுவும் நகைக்கவில்லை.
இருந்தும் அவனிடம் இல்லாத
மனது சொல்லிக் கொண்டேயிருந்து
இவை யாவும் உன்னை
எள்ளி நகைக்கின்றன !


No comments:

Post a Comment