Monday 26 January 2015

படிதாண்டிய என்னால் பெயரெடுத்த ஃபாரடேயும் ஃபிராங்ளினும் எடிசனும்
இன்ன பிறரும்......
-------------------------------
எல்லோரும் விரும்புவது
பத்தினிகளைத் தான்
ஆம் படிதாண்டா
 பத்தினிகளைத் தான்.
ஆனால் நானோ படிதாண்டிய
பத்தினி
அதெப்படி படிதாண்டியும்
பத்தினி
முரணாய் இருக்கிறதோ!
எங்கள் வெளியில்
பத்தினிகள் மட்டும் தான்
படிதாண்டாதவர்கள் ஒருவகை
படிதாண்டியவர்கள்
அல்லது
படியே இல்லாதவர்கள்
வேறொரு வகை.
அநாதி காலம் தொட்டே
படிதாண்டா
பத்தினிகள் நிலை
பிராணநாதர்களை வலம்
வந்தவண்ணம் தான்.
யார் நினைத்தாலும்
அப்பத்தினிகளை படிதாண்ட
செய்ய முடியாது.
இப்பிரபஞ்சம் உள்ளவரை
அப்பத்தினிகள் படிதாண்டமாட்டார்கள்
என்றே நினைக்கிறேன்.
என் நிலைமைதான்
மிக மோசம்
நான் எப்போது படிதாண்டினேன்
எவ்வளவு தேடினாலும்
என் வரலாறு
புரியாத புதிராக
அல்லது புனிதமாகவே உள்ளது.
நான் சிலநூறுமுறை தீக்குளித்தாலும்
பலநூறுமுறை தவமிருந்தாலம்
எனக்கென்று ஒற்றைப்
புருஷன்
இந்த ஜென்மத்தில்
கிடைப்பதற்கில்லை.
இருந்தாலும் எனக்கான
யுகபுருஷர்களை
தேடியே chaosல்
தொலைந்திருந்தேன்.
இப்பாழும் மனிதர்களின் மூளையில்
எப்போது உதித்ததோ
மின்சார சிந்தனை !
மண்ணைத்தொட்ட மின்னலைப் பார்த்தா?
 கண்ணைச்சுட்ட காதலியை பார்த்தா?
என்னைப் போன்ற
எவளோ ஒருத்தி
தன்னிலை மறந்து
மின்னாய்ப் பாய்ந்து
மொத்த பத்தினிகளையும்
படுகுழியில் தள்ளிவிட்டாள்..
படிதாண்டினாலும் பத்தினியான
எங்களை
ஏதோஒரு விசை மூலம்
ஒற்றைக் கணத்தில் வேசியாக்கிவிட்டார்கள்.
ஆம் நான் தான்
கட்டுறா எலக்ட்ரான்.
எலக்ட்ரானா ? எலக்ட்ராளா!
ஏதோ ஒரு இழவு
பேரா இப்போ முக்கியம்.
மெர்க்குரி விளக்கை
வெள்ளையாக்கியதும்
சோடியம் விளக்கை
மஞ்சளாக்கியதும்
நியான் விளக்கை
சிவப்பாக்கியதும்
எங்கள் கூட்டத்தின்
ஓய்வில்லா ஓட்டம்தான்.
ஆனால் பெயர் மட்டும்
 யாரோ எடிசனுக்கோ
ஃபிராங்ளினுக்கோ
ஃபாரடேவுக்கோ.
பேரா முக்கியம் !
இப்போ தான்
படிதாண்டா பத்தினிகளைப்
பார்த்தால்
பொறாமையாய் இருக்கிறது.
யுகத்துக்கும் ஒற்றைப்
புரோட்டானையே
சுற்றியிருக்கலாமே !
இப்போ என்னைப் பாருங்கள்
ஓட்டமோ ஓட்டம்
முடிவில்லா முட்டாள் ஓட்டம்...
அன்று படிதாண்டிய பத்தினி
இன்று விலையில்லா வேசி.
ஆங்கிலம் சரியாத்தான்
சொல்லியிருக்கிறது
"Free Electron" என்று.
தமிழ்ப் படுத்தியவன் தான்
படுத்திவிட்டான்
"கட்டுறா எலக்ட்ரான்" என்று
"விலையில்லா எலக்ட்ரானோ"
"விலையில்லா வேசியோ"
தான் மிகப் பொருந்தியிருக்கும்.
உணர்விலா என்னைப் போன்ற
வேசிகளாலே வேஷம்
களைய முடிவில்லையே!
உணர்வுள்ள உயிருள்ள
படிதாண்டிய பத்தினிகளின்
நிலை என்னவோ !
அவர்கள் அநாதி காலத்திலேயே
படிதாண்டியிருக்கவில்லை
நடுவில் எதுவோ தான்
அல்லது யாரோ தான்
படிதாண்டச் செய்திருக்கவேண்டும்.
அந்த எதுகளையும்
அந்த யார்களையும்
கண்டுவிட்டால் இவர்களின்
பாவ நிலையை மாற்றாலாமோ!
இவர்களையாவது ஏதாவது
புருஷனுடன் சேர்த்துவிடுங்கள்
அவன்
யுகபுருஷனோ
சுந்தரபுருஷனோ
அல்லது
சுமாரான புருஷனோ.
இல்லையென்றால்
இவர்களும் ஏதோவொரு
சிகப்பு விளக்கு ஒளிர
வாழ்க்கை முழுவதும்
ஓடிக்கொண்டேயிருப்பார்கள் !
ஓட்டத்தின் வலி எனக்குதான்
தெரியும் !
என் ஓட்டத்தை தடுக்க
எந்த எடிசனாலும் முடியாது
ஏன் என்னாலும் முடியாது.
ஏன்...!
ஏன்...!
எனக்கும் உணர்வு முளைத்துவிட்டது
இவ்வுலகின் இருளை நீக்க
என் ஓட்டத்தை தவிர
வேறு விதியில்லை !
நான் சொல்ல வந்ததை
சொல்லிவிட்டேன்
பெயரென்ன பெரிய பெயர்
எடிசன்களோ யாரோ
வாங்கித்
தொலைக்கட்டும்
வாழ்ந்து தொலைக்கட்டும்.......



























No comments:

Post a Comment