Monday 26 January 2015

அண்ணல் என்ற ஞானக்கடலின் ஒற்றைத்துளி பருகியவன்
--------------------------------

துடுப்பில்லா தோணியில் துணையில்லா தோணியில்
வாழ்க்கை சமுத்திரம்மேல் வழியிலா வலசை.
எல்லா தோணிகளுக்கும்
ஏதோஓர் துடுப்பிருந்தது
எல்லா தோணிகளிலும்
ஏதோஓர் துணையிருந்தது.
ஒவ்வொருவனும் கொண்டாட
ஒரு கடவுள் ஒரு கலைஞன்
ஒரு காதலி
ஒரு தலைவன் ஒரு தாய்
சீக்கிரம் கிடைத்துவிட்டார்கள்.
எனக்குமட்டும் ஏன்இப்படி !
அறிவிலா அகந்தை
தேடலில்லா திமிர்.
எனக்குமட்டும் ஏன்இப்படி!
ஹிட்லர்களின் இம்சையும்
பிடிக்கவில்லை
காந்திகளின் அகிம்சையும்
பிடிக்கவில்லை.
மூடநம்பிக்கை மீதுகூட
மோகம் வந்துவிடும் போல
கடவுள் என்ற கற்பனை
மீது மட்டும்
நம்பிக்கை வரவே வராதோ!
ஆனால்
தோல்வியில் சாய்ந்தழ
ஒரு தோள்
கண்ணீரைத் துடைக்க
ஒரு கரம்
பயத்தைப் போக்க
ஒரு படை
கிடைக்காதா எனத் தேடினேன்.
நான் குட்டுப்பட
ஒரு மோதிரக்கை
நான் சிலையாக
ஒரு சிற்பி
நான் கரைசேர
ஒரு கலங்கரைவிளக்கம்
என என் தேடலும் நீண்டது
ஆனாலும் தொடர்கிறது
எப்பொழுதும் குட்டுப்படா
தலையாக
எப்பொழுதும் உளிபடாத
கல்லாக
எப்பொழுதே வழிமறந்த
கலனாக
ஓர் துணையற்ற
ஓர் துடுப்பற்ற
தோணியில் தனி வலசை
துடுப்பைத் தேடியே
துணையைத் தேடியே
தொலைந்திருந்தேன் நான்
தொலைத்திருந்தேன் வாழ்க்கையை
சிந்தையில் திடீரென்று
ஓர் தீத்துளி !
ஏன் இந்த பரந்த சமுத்திரத்தை
பருகக் கூடாது ?
ஒரே ஒரு துளிதான்
பருகியிருப்பேன்
அம்பேத்கர் என்ற ஞானக்கடலின்
ஒற்றைத் துளி
நான் பலமுறை மறுதலித்த
மோதிரக் கையின்
ஒற்றைத் துளி
நான் சிலமுறை சிறுமைசெய்த
சிற்பி உளியின்
ஒற்றைத் துளி
இப்போது என்னைச்செதுக்கும்
ஒற்றைத் துளி
ஞானம் புகட்டும்
ஒற்றைத் துளி
ஒற்றைத் துளி பருகிய
என் கைகள் துடுப்பாகின
என் தோள்கள் துணையாகின
எனக்கு
சாய்ந்தழ தோள்கிடைத்தது



















No comments:

Post a Comment